'போர் தொழில்' தந்த எதிர்பார்ப்பு: விக்னேஷ் ராஜாவின் 'கர' திரைப்படம் ஏமாற்றியதா?
'போர் தொழில்' மூலம் தனி முத்திரை பதித்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் 'கர' திரைப்படம் குறித்த விரிவான விமர்சனத்துடன்.
'கர' - ஒரு காலகட்டத்தின் கதை
'கர' திரைப்படம் 1990-91 காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பீரியட் படம். அந்த சமயத்தில் நிலவிய வளைகுடாப் போர் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. நமது கதாநாயகன் தனுஷ் ஒரு திருடன்.
தனது காதலியுடன் சேர்ந்து ஒரு அமைதியான வாழ்வைத் தொடங்க, ஒரு பெரிய திருட்டு வேலையை முடித்துவிடத் திட்டமிடுகிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறார். அங்கே சூராஜ் பெஞ்சமின் என்ற போலீஸ் அதிகாரி இந்த வழக்கை கையாள்கிறார். இருப்பினும், தனுஷ் அந்த அதிகாரியைத் தாக்கிவிட்டுத் தப்பித்து, தனது காதலியுடன் ஆந்திராவில் ஒரு ஹோட்டலில் வேலை செய்து பிழைக்கிறார்.
சில காலம் கழித்து, ஓட்டல் வேலையில் சலிப்புற்று, தனது சொந்த ஊரில் இருக்கும் எட்டு ஏக்கர் நிலத்தை வைத்து ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார். ஆனால், ஊர் திரும்பியதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது ஊர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் பெரும் பாதிப்பில் இருந்தது. வங்கியில் டிராக்டருக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல், வீடுகளுக்கு வீடு டிராக்டர்கள் வீணாக நின்றன. வங்கிகள் நிலங்களை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியிருந்தன. தனது ஊரையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேறு வழியின்றி, மீண்டும் ஒரு திருட்டு வேலைக்கு இறங்க முடிவெடுக்கிறார் தனுஷ். இந்த விஷயம் ஏற்கனவே அவரைக் கைது செய்த போலீஸ் அதிகாரி சூராஜ் பெஞ்சமனுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே 'கர' திரைப்படத்தின் கதை.
திரைக்கதையில் தவறிய 'கழுகுப் பார்வை'
கதையாகப் பார்க்கும்போது, 'கர' ஒரு சுவாரஸ்யமான கருவைக் கொண்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையில் எந்தவித மெனக்கிடலும் இல்லாமல், இவர்களின் வசதிக்கு ஏற்றாற்போல் வளைத்து வளைத்து எழுதியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எளிமையான கதையை எடுத்துக்கொண்டவர்கள், அதற்கான சுவாரஸ்யமான திரைக்கதையை அமைக்கத் தவறிவிட்டனர்.
படத்தின் மையக்கருவான வங்கிக் கொள்ளை என்பது உலகெங்கும் நடப்பதுதான். ஆனால், வங்கியை கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்று மாவட்ட அதிகாரிக்குத் தெரிந்த பிறகும், போதிய பாதுகாப்பு அளிக்காமல், 'அந்த வங்கியை அடிச்சிட்டானா, இந்த வங்கியை அடிச்சிட்டானா' என்று ஈசியாகப் பேசிக்கொண்டிருப்பது நம்பகத்தன்மையை இழந்தது.
மந்தமான நகர்வும், பலவீனமான கதாபாத்திரங்களும்
ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருந்தால்தான், நாயகனுக்கு சவால் கூடும். ஆனால், 'கர' திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி சூராஜ் பெஞ்சமன் கதாபாத்திரம் ஒரு 'சிரிப்புப் போலீஸ்' ஆகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. நாயகன் மீண்டும் மாட்டிக்கொண்டால் என்ன ஆகுமோ என்ற ஒருவித பதற்றம் ரசிகர்களுக்கு ஏற்படவே இல்லை. அவர் எந்தக் காலத்திலும் நாயகனை என்கவுன்டர் செய்யப் போவதில்லை என்பது நமக்கு உறுதியாகவே தெரிந்துவிடுகிறது. இது படத்தின் பரபரப்பைக் குறைத்துவிட்டது.
கதையில் ஒரு குடும்ப உணர்வு, வங்கி கொள்ளை என இரண்டு அம்சங்களைச் சேர்க்க முயற்சித்துள்ளனர். ஆனால், இவை இரண்டையுமே 'ஜவ்வு மிட்டாய்' போல இழுத்து, மிகவும் மெதுவாக சொல்லியிருக்கிறார்கள். கையில் ஒரு ரிமோட் இருந்தால், 'ஃபார்வர்ட்' செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தை இது வரவழைக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல், 'எப்பொழுது முடியும்' என்று எண்ணும் அளவுக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது.
0 கருத்துகள்