அண்மையில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வே.க) எதிர்பாராத வெற்றியைப் பெற்று, 108 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால், இந்த அமோக வெற்றி உடனடியாக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை வழங்கவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான அறுதிப்பெரும்பான்மையான 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு த.வே.க-விடம் இல்லை. தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்துக்கொண்டால், த.வே.க-வின் பலம் 113-ஐ எட்டுகிறது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை அடைய இன்னும் ஐந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பற்றாக்குறையாகவே உள்ளது.
இந்த சூழலில், த.வே.க தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். தனது கட்சியுடன், காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் சேர்த்து 113 எம்.எல்.ஏ.க்களின் பலம் இருப்பதாகக் கடிதம் கொடுத்தார். ஆனால், ஆளுநர் அருளேகர், பெரும்பான்மையான 118 உறுப்பினர்களின் ஆதரவை நேரடியாகக் காட்டினால் மட்டுமே முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது த.வே.க-விற்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
வழக்கமாக, தனிப்பெரும் கட்சியாக வருபவர்களின் தலைவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதுண்டு. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளில் வாக்காளர்கள் அறுதிப் பெரும்பான்மையை யாருக்கும் வழங்காததால், த.வே.க தனிப்பெரும் கட்சியாக வந்தபோதிலும், ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. இது விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியாக இருந்த திமுக-வை பொறுத்தவரை, தங்கள் தலைவர் ஸ்டாலினையே த.வே.க வீழ்த்தியிருப்பது அவர்களுக்குப் பெரும் கோபத்தையும், அரசியல் ரீதியான அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் த.வே.க தொடர்ச்சியாக முன்வைத்த திமுக-வை வீழ்த்தும் வாக்குறுதி உண்மையாக்கப்பட்டதால், திமுக தலைமை, த.வே.க ஆட்சியில் அமர்வதைத் தடுப்பதற்கான தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
அதிமுக-வும் தங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறது. இந்த அரசியல் குழப்பம், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வே.க, தேவையான ஐந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை எவ்வாறு பெறும், அல்லது ஆட்சி அமைப்பதில் வேறு என்ன திருப்பங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 கருத்துகள்